Friday, 23 October 2015

தேனி மாவட்டம் - பெரியகுளம் - பாலசுப்பிரமணியர் கோயில்


அன்பிற்கிணிய நண்பா்களுக்கு....!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணியர்  கோயில் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்திலேயே மிகவும் பழமையான கோயில் இது. இக்கோவிலின் திருப்பெயா் ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில்.

இங்கு மூலவர் சிவனாக இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
 
ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் சிவன், அம்பாள், முருகன் ஆகியோர் அருளுகின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர், சப்தகன்னிகள், பைரவர், ராகு கேது மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்.

சோழமன்னர் கால கட்டடக்கலைக்கு சான்று பகரும் சிறப்பு பெற்ற இக்கோயில் தூண்களில் அகோரவீரபுத்திரர், ருத்ரதாண்டவர், துர்க்கை, மன்மதன் ஆகியோரும் அமைந்துள்ளனர்.
 
இங்குள்ள பிரம்ம தீா்த்தத்தில் நீராடி முருகனை வணங்கிட, தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம்.
 
இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.

பெரியகுளத்தில் ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணியர் ஆறுமுகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகிறார். அருகில் லிங்க வடிவில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர்.
 
ராஜேந்திரசோழமன்னன் கட்டியதால் இக்கோயில் அப்பகுதியில் பேச்சு வழக்கில் "பெரியகோயில்' என்ற சிறப்பு பெயருடன் அடையாளம் காணப்படுகிறது.

முருகனுக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளது. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி இருப்பதால் அதிகளவில் அறுபதாம், எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

 பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை ராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில், ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான்.
 
அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார்.
 
தன் பாவத்தைப் போக்கவும், பசியால் துடித்த பன்றிகளுக்கும் அருளிய முருகப் பெருமானின் திருப்பெருமையை உணர்த்தவும் ராஜேந்திர சோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான்.

இப்புகழ்பெற்ற திருக்கோவிலை தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய நிதியமைச்சருமான திரு. O. பன்னீா்செல்வம் அவா்கள் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தொிவித்துக் கொள்கிறேன்.
No comments:

Post a Comment