Tuesday, 8 December 2015

தேனி மாவட்டம் - கூடலூர் - மங்கலதேவி கண்ணகி கோயில்கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த கோவில்.

உருவமில்லாத கருப்பசுவாமி உள்ளார். கோயிலுக்கு அருகில் தீர்த்தக் கிணறும், கண்ணகி நீராடிய மங்கல தீர்த்தக்குளமும் இருக்கிறது. கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் மீண்டும் ஒன்றுசேரவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் இவளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் செய்கின்றனா்.

இக்கோயில் வளாகத்தினுள் கேரள மக்கள் வழிபடும் துர்க்கையம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகள் நடத்துகின்றனர். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இக்கோயிலில் வழிபாடு செய்கின்றனா்.

கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில், மேற்கு தொடர்ச்சிமலையின் மீது அமைந்த கோயில் இது. கண்ணகி தனிசன்னதியில் நின்ற நிலையில் காட்சி தருகிறாள். கண்ணகியை தெய்வமாக வணங்கிய வேடுவர்கள், சித்ரா பவுர்ணமியன்று விழா எடுத்தனர்.
இதன் அடிப்படையில் தற்போதும் அன்று ஒருநாள் மட்டும் விழா நடக்கிறது. அன்று ஐந்து கால பூஜை நடக்கும். அப்போது சுருளி அருவியில் இருந்து சுரபி தீர்த்தம் எடுத்து வந்து கண்ணகிக்கு அபிஷேகம் செய்வர்.

கண்ணகி உக்கிரமாக வந்து நின்ற தலமென்பதால் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, தயிர்சாதம் நைவேத்யம் செய்கின்றனா். மேலும் அவல், நெய், பால், கற்கண்டு, வாழைப்பழம், பேரீச்சை, சர்க்கரை, ஏலம் சேர்ந்த கலவையை அட்சயம் எனப்படும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்து நிவேதனம் செய்வர். கேரள மக்கள் கண்ணகியை பகவதி அம்மனாக பாவித்து வழிபடுகிறார்கள்.

சேரன் செங்குட்டுவன் இங்கு கோட்டை போல பெரிய சுவர்களுடன் கற்கோயிலாகக் கட்டினான். இதனால் இக்கோயில் "கண்ணகி கோட்டம்' என பெயர் பெற்றது. "கோட்டம்' என்றால்  கோட்டை போல அமைந்த கட்டடத்தைக் குறிக்கும். இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் உள்ளன.

தலவரலாறு

சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) இருந்து, தன் கணவன் கோவலனுடன் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தாள் கண்ணகி. சந்தர்ப்பவசத்தால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் கால்சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி மன்னனிடம் சென்று நியாயம் கேட்டாள்.
தன் தீர்ப்பில் தவறு இருந்ததை உணர்ந்த மன்னனும், அவனது மனைவியும் உயிர் விட்டனர். ஆனாலும், உக்கிரம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள்.

பிறகு, தென்திசை வழியாக 14 நாட்கள் நடந்து இவ்விடத்துக்கு  வந்தாள்.  இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் என்று அழைக்கப்பட்ட பளியர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைந்தது. 

அவர்களிடம் தன் வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.

 
இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர்

சேரமன்னன், இங்கு வந்தது கண்ணகி என அறிந்து மகிழ்ந்தான். சிலப்பதிகாரம் சொல்லும் "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' என்னும் வாசகத்துக்கு ஏற்ப, இங்கு அவளுக்கு கோயில் எழுப்ப விருப்பம் கொண்டான்

இதற்காக இமயத்திற்கு சென்று கல் எடுத்து, அதை கங்கையில் நீராட்டி, கண்ணகிக்கு சிலை வடித்தான். இங்கு கோயில் கட்டி சிலையைப் பிரதிஷ்டை செய்தான்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோவிலையும், இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளையும் ரசிப்பது கண்கொள்ளா காட்சியாகும். 


No comments:

Post a Comment